
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சேர்ந்த ஜெயராம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், மேல் தளத்தில் இருந்த கட்டிடம் சரிந்தது. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள ஜெயராம் மற்றும் அவரது மனைவியை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த இந்துமுன்னணி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராம்(42). இவர் செம்பட்டி அருகே பட்டாசு கடை நடத்திவருகிறார். பட்டாசு கடை கீழ்தளத்தில் உள்ள நிலையில் முதல் மாடியில் ஜெயராம் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜன.17) மாலை 5 மணியளவில் திடீரென வீட்டின் கீழ் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதைத்தொடர்ந்து வெடிச்சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துசிதறின.
இதில் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் உள்ளிட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. தகவலறிந்து வந்த ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
மேலும் கட்டிடத்தின் மேல்தளத்தில் ஜெயராம், அவரது மனைவி ராணி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் கட்டிட இடிபாடுகளிடையே சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கட்டிட இடிபாடுகளை அகற்றி தேடி வருகின்றனர்.