
சாப்ரா: கடந்த வெள்ளியன்று தனது பயணத்தை தொடங்கிய மூன்றாவது நாளில், எம்வி கங்கா விலாஸ் கங்கை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் சிக்கிக்கொண்டது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து ஆறுகளின் வழியாக சுமார் 3200 கி.மீ தூரம் செல்லும் உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உலகின் நீண்ட தூர ஆறு வழி சொகுசு கப்பலான கங்கா விலாஸ் மூன்றாவது நாளான நேற்று பீகாருக்குள் நுழைந்தது. சிராண்ட் சரண் பகுதியில் உள்ள மிக முக்கியமான தொல்லியல் தளத்தை பார்வையிடுவதற்காக கப்பல் நிறுத்தப்பட உள்ளது. இந்நிலையில் சுமார் 11கி.மீ. தொலைவில் உள்ள சாப்ராவில் கங்கை ஆற்றில் கப்பல் தரைதட்டியது. கங்கையில் போதுமான நீர்வரத்து இல்லாததால் கப்பலை இயக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். சுற்றுலா பயணிகள் சிரமம் அடையாத வகையில் உடனடியாக சிறிய படகுகள் மூலமாக மீட்கப்பட்டனர்.