
கூகுள்
கூகுள் நிறுவனத்தில் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி நடவடிக்கையாக மூத்த நிர்வாகிகள் இந்த ஆண்டுக்கான சம்பளத்தில் குறிப்பிட்ட அளவை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணிநீக்க அறிவிப்பு
கூகுள் நிறுவனம் பணிநீக்க அறிவிப்பை மிகவும் தாமதமாக அறிவித்தாலும், இதன் அறிவிப்பு டெக் ஊழியர்கள் மத்தியில் பெரிய அளவிலான கலக்கத்தை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது. கூகுள் உலகம் முழுவதும் தனது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்து சுமார் 6 சதவீத ஊழியர்களைக் குறைத்தது.

சம்பள குறைப்பு
கூகுள் நிறுவனத்தில் திங்களன்று நடந்த முக்கியமான கூட்டத்தில், அதன் ர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக உயர் அதிகாரிகள் சம்பளத்தைக் குறைக்க உள்ளோம். கூகுள் நிறுவனத்தின் 25 வருட வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கத்திற்குப் பின்பும் இந்தச் சம்பளக் குறைப்பு முக்கியமானதாக விளங்குகிறது எனப் பேசியுள்ளார்.

மூத்த துணைத் தலைவர்
மேலும் இந்தச் சம்பளக் குறைப்பு அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் அறிவிக்கப்படாமல் மூத்த துணைத் தலைவர் (மூத்த துணைத் தலைவர்) நிலைக்கு மேலே உள்ள அனைத்துப் பதவிகளிலும் இருக்கும் ஊழியர்களுக்கும் இந்தச் சம்பளக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

போனஸ் தொகை
மேலும் இப்பரிவு ஊழியர்களின் போனஸ் தொகையில் கூடுதல் குறைப்பு இருக்கும். மூத்த அதிகாரிகளுக்குப் பொதுவாகவே அவர்களது சம்பளம் நிறுவனத்தில் அவர்களுடைய செயல்திறன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் போன்ஸ் தொகையில் கூகுள் கை வைத்துள்ளது.

சுந்தர் பிச்சை ஈமெயில்
சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்குப் பணிநீக்கம் குறித்து அனுப்பிய ஈமெயிலில் 25 வருடங்களில் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் செய்வதற்காக நிறுவனம் தள்ளப்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என அறிவித்தார்.

வர்த்தக மூடல்
இந்தப் பணிநீக்கம் மட்டும் அல்லாமல் இதேநேரத்தில் கூகுள் செலவுகளைக் குறைக்கும் விதமாக Pixelbook மடிக்கணினி மற்றும் கேம் ஸ்ட்ரீமிங் தளமாக Stadia ஆகிய இரு பிரிவையும் மூடியது குறிப்பிடத்தக்கது.

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ்
இந்தப் பணிநீக்கம் குறித்துக் கூகுள் நிறுவனர்கள் மற்றும் மிகப்பெரிய பங்குதாரர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் மற்றும் இயக்குநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்பே பிறகு பணிநீக்க முடிவு எடுக்கப்பட்டது என்று சுந்தர் பிச்சை விளக்கம் அளித்துள்ளார்.

பிரச்சனை
கூகுள் நிறுவனம் கடந்த 2 வருடம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்காமல் கூடுதல் ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்துள்ளோம். இதற்கிடையில் குறிப்பாக ரெசிஷன் மற்றும் வட்டி விகித உயர்வுக்குப் பிறகு பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம் என விளக்கம் கொடுத்தார் சுந்தர் பிச்சை.