
ஒசூர்: ஓசூர் அருகே அரசு தொடக்கப் பள்ளிக் கட்டிடம் இடிக்கப் பட்டதால், மொட்டை மாடியில் மாணவர்கள் கல்வி பயிலும் நிலை இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஓசூர் அடுத்த பாலிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உத்தரவின் பேரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளிக் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.
இதனால், அப்பகுதியில் உள்ள இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து அங்கு மாணவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. இதில், ஒரு வீட்டின் மொட்டை மாடியில் 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுகிறது. மேலும், 3 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு வீட்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்ட பின்னர் புதிய கட்டிடம் கட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மொட்டை மாடியில் பாடம் நடத்துவதால் அச்சமாக உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.