
சென்னை: இந்திய சினிமா நடிகை கங்கனா ரனாவத்தின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ‘எல்லோருக்கும் வணக்கம்’ எனச் சொல்லி அவர் இப்போது ட்வீட் செய்துள்ளார்.
35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் என்ட்ரியானவர். தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது வழக்கம்.
ட்விட்டர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த காரணத்தாலும், ட்விட்டர் கொள்கை விதிகளை மீறிய காரணத்தாலும் கடந்த 2021 மே மாதம் கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் கடந்த ஆண்டு எலான் மஸ்க் வாங்கியது முதலே அவரது கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. “சின்னஞ்சிறிய மற்றும் சந்தேகத்திற்குரிய காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் ட்விட்டர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” என மாஸ்க் கடந்த அக்டோபரில் ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது கணக்கு தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
“எல்லோருக்கும் வணக்கம். இங்கு திரும்பியதில் மகிழ்ச்சி” என அவர் ட்வீட் செய்துள்ளார். அதோடு அவர் நடிப்பில் உருவாகி வரும் எமர்ஜென்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.
அனைவருக்கும் வணக்கம், மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி