
நெல்லை : நெல்லை அருகே பள்ளமடை, குப்பனாபுரம் கிராமங்களில் ஊர் கூடி பொங்கல் விழா கொண்டாட்டங்கள் நேற்று சிறப்பாக நடந்தேறின. கிராம மக்கள் தங்கள் கால்நடை செல்வங்களை கோயிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நமது பாரம்பரிய விழாவாகும். இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் இத்திருவிழாவில் ஊர் மக்கள் எப்போதுமே பாச பிணைப்புகளோடு விழாவை கொண்டாடி மகிழ்வர். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்யும் இத்திருவிழாவில் சில கிராமங்களில் பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்று கூடி திருவிழா மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
நெல்லை மாவட்டத்தில் மானூர் அருகே பள்ளமடை, குப்பனாபுரம் கிராமங்களில் பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கான சிறப்பு திருவிழா ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. இவ்வாண்டு கடந்த 15ம்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாட்டு பொங்கலை ஊர் மக்கள் சிறப்பாக கொண்டாடினர்.
காணும் பொங்கல் திருநாளான நேற்று கால்நடைகளுக்கான சிறப்பு பூஜைகள் கிராமங்களில் நடத்தப்பட்டன.
சுமார் 4 ஆயிரம் மக்கள் தொகை ெகாண்ட பள்ளமடை கிராம மக்கள் நேற்று காலையில் வீட்டு வாசல்களை சுத்தம் செய்து, கோலமிட்டனர். தங்கள் கிராமத்தில்
உள்ள சுமார் 150 மாடுகளை குளிப்பாட்டி வெயிலுக்கந்தம்மன் ேகாயில் முன்பு அழைத்து வந்தனர்.ஊர்மக்களும் கோயில் முன்பு ஒன்று திரண்டனர். கோயிலில் அம்மனுக்கு படப்பு போட்டு, சாமியாடி கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பசு, காளை மாடுகளுக்கு தீர்த்தம் தெளித்தனர். உறவுகள் அனைத்தும் திரண்டு ‘பால் பொங்குச்சா’ என ஒருவொருக்கொருவர் குசலம் விசாரித்து கொண்டனர். பின்னர் சாமிக்கு பாயாசம் படைத்து, பூஜைகளை நடத்தி அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். வீடுகளில் இருந்து தீயவைகள் அகலும் வகையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
மானூர் அருகேயுள்ள குப்பனாபுரம் கிராமத்திலும் ஊர் மக்கள் ஒன்று கூடி அம்மன் கோயில் முன்பு கால்நடைளோடு திரண்டனர். கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, மாடுகளை கோயிலை சுற்றி அழைத்து வந்தனர். பின்னர் ஊர் மக்கள் மாடுகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றனர்.
களக்காடு: களக்காட்டில் பாரம்பரிய முறைப்படி சிறுவர்கள் பொங்கலிட்டு கொண்டாடினர்.
தமிழகத்தில் சாதிமத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கிராமப்புறங்களில் பாரம்பரியமுறைப்படி, பழமை மாறாமல் பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டு வருகின்றனர். அந்தவகையில் களக்காட்டில் பாரம்பரிய முறைப்படி சிறுவர்கள் பொங்கலிட்டு கொண்டாடினர். தங்களது வீட்டு முன்பாக கரும்பு, மஞ்சள் குலைகளுடன் திருவிளக்கு ஏற்றி, மண் அடுப்பில், மண்ணால் ஆன சிறிய பானைகளை வைத்து அவர்களே அடுப்புகளுக்கு தீயிட்டனர், தண்ணீர் சூடானதும் புத்தரிசியிட்டு, பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கிய போது, பொங்கலோ, பொங்கல் என்றும் முழக்கமிட்டனர்.
பின்னர் இறைவனுக்கும், இயற்கைக்கும் பொங்கலை படைத்து பாரம்பரிய முறைப்படி வழிபட்டனர். பழமை மாறாமல், பழங்கால முறையுடன் தமிழ் கலாசாரத்தின் படி பொங்கலிட்ட சிறுவர்களை பொதுமக்கள் பாராட்டினர். இதேபோல் சிறுவர்களும் நமது பாரம்பரியத்தை உணர்ந்து செயல்பட்டால் நமது கலாசாரமும், பண்பாடும் மங்காமல் தலைமுறை தலைமுறையாக ஒளிவீசிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
களக்காடு நாடார் புதுத்தெருவில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி 2 நாட்கள் நடத்தப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.
இதைத்தொடர்ந்து 120 கிலோ எடை கொண்ட இளவட்டக் கல் தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற இளைஞர்கள் இளவட்டக் கல்லை தூக்கி அசத்தினர். இதேபோல் பெண்களும் உரல்களை தூக்கி அசத்தினர். தொடர்ந்து வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.