
ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 176 ரன்கள் குவித்துள்ளது. நியூஸிலாந்து அணிக்காக கான்வே மற்றும் மிட்செல் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இழந்த நிலையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி இன்று ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் தேர்வு செய்யப்பட்டது. நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே விரைவாக ரன் சேர்க்கும் முனைப்புடன் விளையாடியது.
ஆலன், 23 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் சிக்ஸர் விளாச முயன்று அவர் அவுட் ஆனார். அதே ஓவரில் மார்க் சேப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் கிளென் பிலிப்ஸ் உடன் இணைந்து 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கான்வே. பிலிப்ஸ், 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கான்வே வெளியேறினார். தொடர்ந்து பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னரும் தங்களது விக்கெட்டை இழந்தனர். கடைசி 5 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 59 ரன்கள் எடுத்தது. இதில் கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார்.
நோபாலாக வீசப்பட்ட முதல் பந்தில் சிக்ஸர் உட்பட வரிசையாக 3 சிக்ஸர்களை அந்த ஓவரில் மிட்செல் விளாசினார். அதன் மூலம் 26 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்த நான்கு பந்துகளில் முறையே 4, 0, 2, 2 என ரன்கள் எடுத்தார். அதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. தற்போது இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை விரட்டி வருகிறது. கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகி உள்ளார். ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.