
ராய்ப்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 3 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் மாநில ஐதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி சட்டீஸ்கர் ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா களம் இறங்குகிறது.பேட்டிங்கில் சுப்மான்கில் அடுத்தடுத்து சதம் விளாசி சூப்பர் பார்மில் உள்ளார். கேப்டன் ரோகித்சர்மா சதம் அடித்து ஒரு ஆண்டிற்கு மேலாகிவிட்டது. மிடில் ஆர்டரில் கோஹ்லி, பாண்டியா, சூர்யகுமார் யாதவ் வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சு தான் எப்போதும் போல் பலவீனமாக உள்ளது. சிராஜ் மட்டும் சிறப்பாக செயல்படுகிறார். இதனால் நாளை ஷர்துல் தாகூருக்கு பதிலாக உம்ரான்மாலிக் களம் இறங்குவார் என தெரிகிறது. மறுபுறம் நியூசிலாந்து முதல் போட்டியில் வெற்றியை நெருங்கி கடைசியாக ஓவரில் கோட்டைவிட்டது. இதனால் நாளை பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் லதாம், கான்வே, பிலிப்ஸ், மிட்செல், ஃபின் ஆலன் வலுசேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதி நாளை விளையாட வாய்ப்பு உள்ளது.இரு அணிகளும் நாளை 115வது முறையாக ஒருநாள் போட்டியில் மோத உள்ளன. இதற்கு முன் ஆடிய 114 போட்டிகளில் இந்தியா 56, நியூசிலாந்து 50 போட்டிகளில் வென்றுள்ளன. ஒருபோட்டி டையில் முடிந்துள்ளது. 7 போட்டி கைவிடப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். சுழற்பந்துவீச்சும் எடுபடும்.இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.