
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார்.
இந்திய அணியின் பிரதான பந்து வீச்சாளரான பும்ரா விளையாடாத நிலையில் சிராஜ் அமர்க்களமாக பந்து வீசினார். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி உயிரிழந்தார். அதிக ரன்கள் கொடுக்காமல் எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார்.
தற்போது 729 புள்ளிகள் பெற்ற சிராஜ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் பவுலிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பிரிவில் டாப் 10-ல் இடம்பெற்றுள்ள ஒரே பவுலரும் சிராஜ்தான்.
28 வயதான அவர் மொத்தம் 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
கில் முன்னேற்றம்: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் 3 சதம் மற்றும் 1 அரைசதம் பதிவு செய்துள்ளார். அதன் காரணமாக அவர் டாப் 10 ஐசிசி பேட்டிங் தரவரிசையில் 6-வது இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய கோலி, ஓர் இடம் பின்தங்கி 7-வது இடம் பிடித்துள்ளார்.