
செகந்திராபாத்: இந்தியாவின் கனவை கல்வீசி தடுக்க முடியாது என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆவேசமாக கூறினார். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையே 8வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடக்கி வைத்தார்.
‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், ஏற்கனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தெலங்கானா – ஆந்திரா இடையே இயக்கப்படுகிறது. முழுவதும் ஈசி வசதி செய்யப்பட்ட 14 பெட்டிகள், சிறப்புப் பிரிவு பெட்டிகள் 2 என மொத்தம் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 1,128 போ் பயணிக்க முடியும். 6 முதல் 7 மணி நேர பகல் நேரப் பயணம் என்பதால் படுக்கை வசதி கிடையாது. இந்த ரயில் சென்னையில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடப்பது குறித்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில்கள் மீது கற்களை வீசத் தூண்டும் பின்னணியில் சில அரசியல் கட்சிகள் உள்ளன. சட்டவிரோதச் செயலை அரசியல் கட்சிகள் தடுக்க வேண்டும். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு கனவை, கல்லெறிந்து தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவின் முன்னேற்றத்தை விரும்பாத சிலர், வந்தே பாரத் ரயில்கள் மீது கல்வீசி வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வந்தே பாரத் ரயில்கள் 19 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்’ என்றார்.