
சென்னை: சர்வதேச தோல் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஆர்.விஜயன் கூறியது: தற்போதைய நிலையில் இந்திய தோல் பொருட்களின் வர்த்தகம் 1,000 கோடி டாலராக (இந்திய மதிப்பில் ரூ.82,000 கோடி) உள்ளது. இதில், ஏற்றுமதியின் பங்களிப்பு 500 கோடி டாலராகும். சர்வதேச தோல் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம்.
தமிழகத்திலிருந்து மட்டும் 250-300 கோடி டாலர் அளவிற்கு தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது, ஒட்டுமொத்த இந்திய தோல் ஏற்றுமதியில் 45 சதவீத பங்காகும். குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு ஷு வகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உள்நாட்டிலும் தோலினால் உருவாக்கப்பட்ட பெல்ட், காலணிகள், பைகளுக்கான தேவை மிகவும் அதிகரித்து வருகிறது.அதன் காரணமாக, 2025-ல் தோல்துறையின் ஏற்றுமதி மும்மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தோல் தயாரிப்புகளை உலக சந்தையில் அதிகளவில் சேர்க்கும் வகையில் தோல் பொருட்கள் பேஷன் ஷோ பிப்ரவரி 1-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில், 450 உள்நாட்டு, 20 வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.