
பழநி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநியில் பல்வேறு விதமான காவடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பு பூஜைகளும், காவடி ஆட்டமும் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு உட்பட்ட பெரிய நாயகியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ஜன.29-ம் தேதி தொடங்கி பிப்.7 வரை திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விரதம் இருந்து மாலை அணிந்து முன்கூட்டியே பாதயாத்திரையாக வரத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக, மாநில திருவிழா நெருங்கும்போது வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்துவர்.
அந்த வகையில் காவடி எடுக்கும் பக்தர்களுக்காக பழநியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். அதற்காக, மூங்கில், மூங்கில் தப்பை, மாம்பலகை, வேங்கை, மயில் இறக்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. காவடிகளின் அளவைப் பொறுத்து ரூ.50 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
காவடி பணியில் ஈடுபட்டு வரும் சீனிவாசன் கூறினார்: கடந்த 35 ஆண்டுகளாக காவடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். வேண்டுதலை நிறைவேற்ற விரும்பும் பக்தர்கள் விரதமிருந்து காவடியை சுமந்து செல்வது வழக்கம். நாங்கள் தயாரிக்கும் காவடிகளை கேரள பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
பக்தர்கள் விரும்பும் வண்ணம் பூசியும், அலங்கரித்தும் விற்பனை செய்கிறோம். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவை நம்பி ஆண்டு முழுவதும் உழைத்து வருகிறோம் என்றார்.