
இன்றைக்கு 24 மணி நேரமும் மொபைல் மற்றும் லேப்டாப்களைப் பயன்படுத்துதல், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே கண்களில் பல விதமான பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பானதாக மாறிவிட்டது. குறிப்பாக மூளை மற்றும் கண்களுக்கு இடையே உள்ள பார்வை நரம்பு சேதமடைந்தால் குளுக்கோமா (Glaucoma) எனப்படும் கண் நீர் அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த நோய் ஆண்டுதோறும் சுமார் 12 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிப்பதாக ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் கண்ணுக்குள் உள்விழி அழுத்தத்தின் காரணமாக ஏற்படுகிறது.
குளுக்கோமா (Glaucoma) பாதிப்பின் அறிகுறிகள்: கண் நீர் அழுத்த நோய்க்கு சில சமயங்களில் எந்த அறிகுறிகளும் தெரியாது. இருந்தால் போதும், கண்களில் வண்ண வளையங்கள், கண்களைச் சுற்றி எரிச்சல், கண்ணாடிகளை அடிக்கடி மாற்றுவது, கண் வலி, போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே நீங்கள் கண்டறியவில்லை என்றால், பார்வை இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. முதன்மை திறந்த கோண குளுக்கோமா, ஆங்கிள் குளோசர் குளுக்கோமா, நார்மல் -டென்ஷன் குளுக்கோமா என பல வகைகள் உள்ளன. எனவே மேற்கூறிய அறிகுறிகள் எதுவும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சோதனை செய்து கொள்வதால் உங்களுக்கு பிரச்சனை ஏற்படாது.
பொதுவாக இந்த பாதிப்பு வயதானவர்களுக்குத் தான் ஏற்படும் என்பது கட்டுக்கதை. 40 வயதிற்கு மேற்பட்டோரையும் எளிதில் பாதித்துவிடும் என்றாலும், அனைத்து வயதினருக்கும் அவர்களின் வயதுக்கு ஏற்ப குளுக்கோமா பாதிப்பு ஏற்படும். இந்த நோய் தீவிரமானது இல்லை என பலர் சொல்வதால் நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. ஆரம்பத்திலேயே முறையான கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
சிகிச்சை முறைகள்? கண் நீர் அழுத்த நோய் பாதிப்பை மருந்து மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். ஆரம்பத்தில் நீங்கள் கண்டறிந்து விட்டீர்கள் என்றால், கண் சொட்டு மருந்துகள் மற்றும் மாத்திரைகளை நாம் உபயோகிக்க வேண்டும். இது பார்வைக்குறைபாட்டை சரிசெய்ய உதவியாக இருக்கும்.
ஒருவேளை மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகள் பலனளிக்காத போது தான், குளுக்கோமா பாதிப்பிற்கு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக லேசர் அறுவை சிகிச்சை, மைக்ரோ அறுவை சிகிச்சை மற்றும் பாரம்பரிய அறுவை சிகிச்சை உட்பட கிளௌகோமாவின் வகையைப் பொறுத்து கிளௌகோமாவுக்கு பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: உங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா.? இந்த உணவுகளை முயற்சி செய்து பாருங்கள்.!
எனவே கண்களில் ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு ஏற்படும் பட்சத்தில், முறையாக கண் மருத்துவரை அணுகி கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.