
மும்பை: விரைவில் களத்தில் சந்திக்கலாம் என விபத்துக்கு சிக்கிய நிலையில் மீண்டும் வரும் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் அவரது ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி – டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்தபோது சாலையின் இடையே ஏற்பட்ட தடுப்புக் கட்டத்தில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடைபெற்றது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. முதலில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மூட்டுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்நேரத்தில் உங்கள் ஆதரவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். வெற்றிகரமாக எனக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காயத்தில் இருந்து மீண்டும் வரும் பயணத்தை தொடங்கி உள்ளேன். என் முன்னே உள்ள சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். அரசு மற்றும் பிசிசிஐ-க்கு நன்றி.
இந்நேரத்தில் ரசிகர்கள், சக வீரர்கள், மருத்துவர்கள் மற்றும் பிஸியோ என உங்கள் அனைவரது அன்பான வார்த்தைகளுக்கும், ஊக்குவிப்புக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” என பந்த் ட்வீட் செய்துள்ளார்.
உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஊக்குவிப்புக்காக எனது ரசிகர்கள், அணியினர், மருத்துவர்கள் மற்றும் பிசியோக்கள் அனைவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரையும் களத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். #நன்றியுடன் #ஆசிர்வதிக்கப்பட்டவர்