
மகிந்திரா நிறுவனம், எக்ஸ்யுவி 400 எலக்ட்ரிக் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இது இந்த நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள முதல் எலக்ட்ரிக் வாகனமாகும். உலக எலக்ட்ரிக் வாகன தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தின் எக்ஸ்யுவி 300 மாடலை அடிப்படையாக வைத்து இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் எக்ஸ்யுவி 400 ஐசி மற்றும் ஐஎல் என்ற 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஷோரூம் விலையாக எக்ஸ்யுவி400 ஐசி சுமார் ரூ.15.99 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 34.5 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 375 கி.மீ தூரம் வரை செல்லலாம், 3.3 கிலோவாட் அவர் பேட்டரி மூலம் சார்ஜ் செய்யலாம். 7.2 கிலோவாட் அவர் சார்ஜருடன் சுமார் ரூ.16.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், எக்ஸ்யுவி 400 ஐஎல் ஷோரூம் விலை சுமார் ரூ.18.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 39.4 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கி.மீ தூரம் வரை செல்லலாம். இத்துடன் 7.2 கிலோவாட் அவர் சார்ஜர் வழங்கப்படும். இந்த 2 கார்களிலும் 110 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது அறிமுகச்சலுகை விலைதான் எனவும், முதல் 5,000 முன்பதிவுகளுக்கு மட்டுமே இந்த சலுகை உண்டு எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு வாரண்டி, மற்றும் கூடுதலாக, 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கி.மீட்டருக்கு பேட்டரி மற்றும் மோட்டாருக்கு வாரண்டி வழங்கப்படும் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.