
மத்திய அரசு
மத்திய அரசு தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் (FY23) நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் ஜனவரி 10 வரை 14.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் செய்யப்பட்ட மொத்த வசூல் 24.58 சதவீதம் அதிகமாகும்.

நேரடி வரி
மத்திய நிதியமைச்சக வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, ஜனவரி 10, 2023 வரையிலான நேரடி வரி வசூல்களின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. ரீஃபண்ட்களைச் சரிசெய்த பிறகு, நிகர நேரடி வரி வசூல் 12.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் வசூலித்ததை விட 19 சதவீதம் அதிகமாகும்.

மொத்த அளவு
2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் நேரடி வரி வசூலில் மொத்த அளவின் வசூலில் இது 86.68 சதவீதம் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் நேரடி வரி வசூலில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாக தனிநபர் வருமான வரி அதிகரிப்பு பெரும் பங்கு வகிக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கூடுதல் செலவினங்கள்
2022-23 ஆம் ஆண்டு நிதியாண்டில் நேரடி வரிகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றில் ஏற்பட்ட வரி வசூல் கூடுதல் செலவினங்களைக் கணக்கிடும் பகுதியை ஈடு செய்யும் என ICRA அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணரான அதிதி நாயர் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

மொத்த வரி வசூல் அளவீடுகள்
இந்த நிலையில் நாட்டின் மொத்த வரி வசூல் அளவீட்டில் கார்பரேட் வரி (சிஐடி) வசூல் 19.72 சதவீதமும், தனிநபர் வருமான வரி (பிஐடி) வசூல் 30.46 சதவீதமும் அதிகரித்துள்ளது எனப் புதன்கிழமை வெளியான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.