
புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக 2011ம் ஆண்டு முதல் 66 வயதான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இருந்து வருகிறார். இவர் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொள்கிறார். அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் 30 பேர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் பேட்டை. இதில், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சரிதா மோர், சங்கீதா போகத், அன்ஷூமாலிக், சத்யவார்த் மாலிக், ஜிதேந்தர் கின்ஹா, அமித் தங்கர், சுமித் மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நட்சத்திர வீராங்கனை 28 வயதான வினேஷ் போகத் கூறினார் `பிரிஜ் பூஷனின் பாலியல் சீண்டல்களுக்கு குறைந்தது 10-12 மல்யுத்த வீராங்கனைகள் உள்ளனர்.அவர்களின் பெயரை இப்போது வெளியிடமாட்டேன். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் போது பாதிக்கப்பட்ட வீராங்கனைகளின் விவரம் நிச்சயம் சொல்வேன், என்றார். இதனிடையே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரிஜ் பூஷன், தன்மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன், என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடுத்த 72 மணி நேரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே 41 மல்யுத்த வீரர்கள் மற்றும் 13 பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் நேற்று முதல் லக்னோவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தில் தொடங்கவிருந்த மகளிர் தேசிய மல்யுத்த பயிற்சி முகாம் ரத்து செய்யப்பட்டது.