
தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பைசு அள்ளியில் பெரியார் பல்கலைக் கழகத்தின் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தின் இயற்பியல் துறை சார்பில் தேசிய அளவிலான 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. ‘சமூகப் பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பொருட்கள்’ என்ற தலைப்பிலான அறிவியல் கல்வியாளர்களின் விரிவுரைப் பட்டறை தொடக்க நிகழ்ச்சியில் இயற்பியல் துறை தலைவர் செல்வபாண்டியன் வரவேற்றார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து, சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை டீன் சேது குணசேகரன், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக் கழக இயற்பியல் துறை பேராசிரியர் ஜெய்சங்கர்,
சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் ராமமூர்த்தி, பைசுஅள்ளி ஆராய்ச்சி மைய இயக்குநர் மோகனசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இயற்பியல் துறை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.