
பத்ம விருதுகள்
அந்த வகையில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களான ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, இந்தியாவின் மிகச் சிறந்த முதலீட்டாளராக வலம் வந்த மறைந்த ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவர்களை தவிர இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி, சுதா மூர்த்திக்கும், ரஸ்னா குழுமத்தின் மறைந்த தலைவர் அரீஸ் கம்பட்டாவுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குமார் மங்கலம் பிர்லா
குமார் மங்கலம் பிர்லா பத்ம பூஷன் விருதினை பெற்றுள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவரான இவர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், கிரசிம் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில், ஆதித்யா பிர்லா கேப்பிட்டல் உள்ளிட்ட நிறுவனங்களின் குழுமங்களின் இயக்குனர் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். சிஏ படித்தவரான பிர்லா, லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவர்.

கல்வி குழுமம்
சர்வதேச அளவில் வெற்றிகரமான தனது வணிகத்தினை செய்து வரும் பிர்லா, லண்டன் பிசினஸ் ஸ்கூலின் ஆசிய பசிபிக் ஆலோசனை குழுவிலும் உள்ளார். கல்விக்காக தனது தாத்தா நினைவாக 2019 ஆம் ஆண்டு ஆண்டிக் லண்டன் பிசினஸ் ஸ்கூலுக்கு 15 மில்லியன் பவுண்டுகளை ஊக்க நிதியினை வழங்கினார்.

ராகேஷ் ஜுன் ஜுன்வாலா
மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பற்றி பலரும் அறிந்திருக்கலாம். பில்லியனரான இவர், இந்தியாவின் வாரன் பபெட் என செல்லமாக அழைக்கப்பட்டவர். இந்தியாவின் பிக் புல் என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று, 62 வயதில் காலமானார்.

பங்கு சந்தை முதலீட்டாளர்
சாதாரணமான குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, தனது நிகர சொத்து மதிப்பை 5,000 ரூபாயில் இருந்து 5.5 பில்லியன் டாலராக உயர்த்தியவர். அதுவும் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் வளர்ச்சி கண்டவர். இந்தியாவின் சிறந்த பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, சிறந்த பங்கு சந்தை முதலீட்டாளர். அவரது மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலாவும் பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகிறார்.

சுதா மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி. பல்வேறு சமூக சேவைகளை செய்து வருபவர். சிறந்த கல்வியாளர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அறக்கட்டளையின் தலைவர் ஆவார்.

அரிஸ் கம்பட்டா
ரஸ்னா குழுமத்தின் தலைவரான மறைந்த அரீஸ் கம்பட்டாவுக்கு பத்மா ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பட்டாவின் தலைமையின் கீழ் 53 நாடுகள் வரையில் வணிகத்தினை விரிவாக்கம் செய்தது ரஸ்னா குழுமம். இது குளிர்பான பிராண்டிற்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும்.