
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் நடந்த பொங்கல் விழாவில் பெண்கள் வெள்ளை சேலை அணிந்து பொங்கலிட்டனர். சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள மேலத்தெரு, கீழத்தெரு, சலுகைபுரம் பகுதிகளில் குறிப்பிட்ட சமூகத்தினர் ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது காவல் தெய்வங்களாக பச்சநாச்சி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று கோயில் முன் பொங்கலிட்டு வழிபாடு செய்கின்றனர்.
மாட்டுப்பொங்கலை கணக்கிட்டு அதற்கு 15 நாட்கள் முன்பிருந்து விரதம் கடைபிடிக்கின்றனர். பிடாரி அம்மன் கோயிலில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொங்கல் வைத்த பெண்கள் வளையல், மெட்டி, கொலுசு போன்ற ஆபரணங்களை தவிர்த்து வெள்ளை சேலை கட்டி ஒற்றுமையுடன் ஒரே இடத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் கரும்புகளில் தொட்டில் கட்டி பிடாரி அம்மன், பொன்னழகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அவ்வாறு செலுத்திய தொட்டில் கரும்புகள், அம்மன் காலடியில் வைத்த எலுமிச்சை உள்ளிட்ட பொருட்கள் கோயில் வாசலில் கூடி பொங்கலிட்ட பின் ஏலம் விடப்பட்டது. இவை பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
விழாவில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், ‘‘விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் வசதி படைத்தோர், ஏழை என வித்தியாசம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆபரணம், உயர் ரக ஆடைகள் ஆகியன முந்தைய காலத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது. அதையே தற்போதும் கடைப்பிடிக்கிறோம். அதனால் வெள்ளை நிற ஆடை அணிந்து பொங்கல் வைக்கிறோம். சாமிக்கான பொருட்களை ஏலம் எடுத்துச் சென்றால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதனால் வேண்டிய பொருட்களை பல ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுக்கிறோம்’’ என்றனர்.