
சென்னை: அசாம் அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 540 ரன் குவித்து ஆல் அவுட்டானது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ் நாடு முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்தது (90 ஓவர்). தர்சன் 2, அபராஜித் 23, இந்திரஜித் 77, ஜெகதீசன் 125 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். பிரதோஷ் ரஞ்சன் பால் 99 ரன், விஜய் ஷங்கர் 53 ரன்களுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.
அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 263 ரன் சேர்த்து அசத்தியது. பிரதோஷ் ரஞ்சன் 153 ரன் (212 பந்து, 16 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த ஷாருக் கான், சாய் கிஷோர் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். விஜய் ஷங்கர் 112 ரன் (187 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். சந்தீப் 3, திரிலோக் நாக் 14 ரன்னில் அவுட்டாக, தமிழ் நாடு முதல் இன்னிங்சில் 540 ரன் குவித்து ஆல் அவுட்டானது (132.3 ஓவர்).
அசாம் பந்துவீச்சில் ரயன் பராக் 4, சித்தார்த் சர்மா 3, முக்தார், சுனில், ஸ்வரூபம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய அசாம் அணி 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன் எடுத்துள்ளது (45 ஓவர்). மண்டல், ரிஷப் தாஸ் தலா 13, ஹசாரிகா 4, பராக் 48 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கோகுல் ஷர்மா 18 ரன், அபிஷேக் தாகுரி 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது. டெல்லி முன்னிலை: மும்பை அணியுடன் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 293 ரன் குவித்து ஆல் அவுட்டானது (79.2 ஓவர்). பிரித்வி ஷா 40 ரன், சர்பராஸ் கான் 125 ரன் விளாசினர். 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 316 ரன் குவித்துள்ளது (90 ஓவர்). ஷோகீன் 45, வைபவ் ராவல் 114, கேப்டன் ஹிம்மத் சிங் 85 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். விஜய்ரன் 4, திவிஜ் மெஹ்ரா 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.