
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான ராகுல் திராவிடின் மகன் அன்வே திராவிட் 14 வயதுக்குட்பட்ட கர்நாடக அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல தொடரில் அவர் கர்நாடக அணியை வழிநடத்தியுள்ளார்.
தனது தந்தையை போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அன்வே திராவிட், கேப்டன் பொறுப்பை சிறப்பாக கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் திராவிடின் இளைய மகன்.
கடந்த 2020-ல் பிடிஆர் ஷீல்ட் அண்டர் 14 குரூப் 1 அரையிறுதியில் அரை சதம் விளாசி கவனம் ஈர்த்தவர் அன்வே. அந்தப் போட்டியில் சதம் பதிவு செய்ய 10 ரன்கள் மட்டுமே எஞ்சியிருக்க அவுட்டானார். ராகுல் திராவிடின் மூத்த மகன் சமித் திராவிட் இதே ஆண்டர் 14 கர்நாடக அணிக்காக விளையாடியுள்ளார். அவர் இந்தப் பிரிவில் இரண்டு முறை இரட்டை சதம் பதிவு செய்துள்ளார்.
ராகுல் திராவிடின் பயிற்சியின் கீழ் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.