
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வர் கோயிலில் ரத சப்தமி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செய்யாறு நகரம் திருவோத்தூர் பகுதியில் உள்ள பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோயில், பாடல் பெற்ற 32 திருத்தலத்தில் 8-வது திருத்தலமாகும். இக்கோயிலில் ரத சப்தமி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக, கடந்த 20-ந்தேதி சிம்ம வாகனத்தில் கிராம தேவதையான காங்கியம்மன், 21-ந்தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் தலைமையில் வீதியுலா நடைபெற்றது.
கொடிமரம் முன்பு உற்சவமூர்த்திகளான வேதபுரீஸ்வரர் மற்றும் பாலகுஜாம்பிகை அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து மங்கள இசை ஒலிக்க, வேத மந்திரங்களை முழங்கி சிவாச்சாரியார்கள் நேற்று அதிகாலை கொடியேற்றினர். ரத சப்தமி பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு பஞ்ச மூர்த்திகளின் வீதி உலா நடைபெற்றது.
மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகன், கற்பக விருட்சிக வாகனத்தில் வேதபுரீஸ்வரர், காமதேனு வாகனத்தில் பாலகுஜாம்பிகை அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
2-வது நாளான இன்று காலையில் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், 24-ஆம் தேதி இரவு பூத வாகனத்திலும், 25-ஆம் தேதி பெரிய நாக வாகனத்திலும், 26-ஆம் தேதி காலை அதிகார நந்தி வாகனத்திலும், இரவில் பெரிய ரிஷப வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெற உள்ளது.
மேலும் 27-ம் தேதி காலை சந்திரசேகரர் மற்றும் 63 நாயன்மார்களின் உற்சவம், மாலையில் அம்மன் தோட்ட உற்சவம், இரவில் திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன உற்சவம் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேதோராட்டம் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 29-ஆம் தேதி காலை சந்திரசேகரர் வீதி உலா, இரவு ராஜ அலங்காரத்தில் குதிரை வாகன வீதி உலாவும், 30-ஆம் தேதி காலை பிச்சாடனர் வீதி உலாவும், இரவில் நந்தி வாகன வீதி உலா நடைபெறவுள்ளது.
ரத சப்தமி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான வரும் 31-ம் தேதி காலை நடராஜர் வீதி உலா மற்றும் மாலையில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன. இதையடுத்து அன்றிரவு கொடி இறக்கம் நடைபெற்றது, திருக்கயிலாய வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளின் வீதி உலா நடைபெற உள்ளது.