
செய்தி
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் வாகனமான காகம், சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும். அதற்கான பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் படிப்படியாக குறையும்.
சனியால் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும் என்பதால்தான் பலரும் பயப்படுகிறார்கள். ஒருவருக்கு ஏழரை சனி பிடிக்கும் போது சனிபகவான் விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார். தொழிலில் நஷ்டம் ஏற்படும். கடன் பிரச்சினை வரும். தேவையற்ற அசிங்கம், அவமானம் வந்து சேரும். நமக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பது பலருக்கும் யோசனையாக இருக்கும்.

சிலருக்கு சனியின் பாதிப்பு பற்றி தெரியாது. நமக்கு ஏழரை சனி நடக்கிறதா என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். சனிபகவானின் பிடியில் நாம் சிக்கியுள்ளோம் என்பதை சில அறிகுறிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம்.
சனியின் பிடியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். லேட்டாக எழுந்திருப்பார்கள். அசுத்தமானவர்களாக இருப்பார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். பல் கூட துலக்காமல் காப்பி குடிப்பார்கள். அடிக்கடி கீழே விழுந்து கை, கால்களில் அடிபடும் எலும்பு முறிவு ஏற்படும்.
காகம் சனிபகவானின் வாகனம். காகம் ஒருவரை விடாமல் துரத்தும். நாம் சாதாரணமாக நடந்து செல்லும் போது, வாகனத்தில் செல்லும் போது சிலரை தலையில் உடம்பில் கொத்தும் அப்போது கோச்சாரப்படி சனி பகவனால் நமக்கும் சங்கடமான நிலையில் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். சிலருக்கு ரயிலில் பயணம் செய்யும் போது பாத்ரூம் அருகில் சீட் கிடைக்கும். மூக்கை பிடித்தவாறே பயணிக்க வேண்டியிருக்கும். நாம் நடந்து செல்லும் போது குப்பை லாரியில் இருக்கும் குப்பை திடீரென உங்கள் மீது விழும். தெரியாமல் மலத்தை மிதித்து விடுவீர்கள்.
இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் . இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்று விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்துக்கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கொடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
அனுமாரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கலாம். தெய்வீக அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். விநாயகரின் உருவப்படம் மற்றும் சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்கிய பின் கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். பின் மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்திரி மந்திரத்தை 21முறை பாராயணம் செய்ய வேண்டும். பிரசாதம் படைத்து ஆரத்தி காட்ட வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும். சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்கினால் மிகவும் நல்லது. பூஜையின் இறுதி நாளில் அனுமான்,சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வர சனிப்பெயர்ச்சி செய்தால் பாதிப்புகள் குறையும்.
ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
ஆங்கில சுருக்கம்
சனிப்பெயர்ச்சி பலன் 2023 முதல் 2025 வரை மகரத்தில் இருந்து கும்பத்திற்கு சனி பெயர்ச்சி. சனி பகவான் கர்மகாரகன்.சனி நீதிமான் மற்றும் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து பாடம் கற்பிப்பவர். காகம், சனியின் இருப்பிடமாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க வேண்டியிருக்கும் போது, சனியால் நமக்கு சில தொல்லைகள் ஏற்படப் போகிறது என்பதை அறியலாம். அதற்குப் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் படிப்படியாகக் குறையும்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: செவ்வாய், ஜனவரி 17, 2023, 13:39 [IST]