
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா, நடப்பு ரஞ்சிக் கோப்பை தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்தில் களம் கண்ட அவர் இதன் மூலம் தனது வருகையை கிரிக்கெட் உலகிற்கு தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் உட்பட சில முக்கிய தொடர்களை அவர் மிஸ் செய்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இருந்தபோதும் தனது பிட்னஸை அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
அதனால் 2018-க்கு பிறகு ரஞ்சியில் முதல் முறையாக தமிழ்நாடு அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 24-ம் தேதி தொடங்கிய போட்டியில் விளையாடினார். அவர் சவுராஷ்டிரா அணியை தலைமை தாங்கினார். இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 17.1 ஓவர்கள் வீசி 53 ரன்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் ஜடேஜா. முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டை கைப்பற்றி இறந்தார்.
தற்போது சவுராஷ்டிரா அணி 266 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை விரட்டி வருகிறது. ஜடேஜாவின் இந்த அபார ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிதும் உதவும்.