
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 187 புள்ளிகள் (0.31 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 60,858 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் (0.32 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,107 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை 100 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி விரைவாக வீழ்ச்சியை நோக்கி பயணித்தது. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 235.99 புள்ளிகள் சரிந்து 60,809.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,104.30 ஆக இருந்தது.
உலக அளவில் நிலவிய பாதகமான சூழல், அமெரிக்க பொருளாதாரத் தரவுகள் மந்தநிலை அச்சம் போன்ற காரணங்களால் உருவாக்கப்பட்ட, நுகர்வோர், உலோகப் பங்குகளின் சரிவும் இந்தியப்பங்குச்சந்தைகளின் இன்றைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் இரண்டுநாள் லாபத்தில் இருந்து மாறி இன்று நஷ்டத்தில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது நிஃப்டி ஒரு நாளில் அதிகபட்சமாக 100 புள்ளிகள், சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 187.31 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60, 858.43 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.50 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,107.85 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ பங்குகள் உயர்வடைந்துள்ளன. எம் அண்ட் எம், இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ், ஈசியன் பெயின்ட்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டன.