
செய்தி
ஓய்-ஜெயலட்சுமி சி
சென்னை: சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். 2025ஆம் ஆண்டுவரை சனிபகவான் கும்ப ராசியில் நேர் கதியிலும் வக்ரமடைந்தும் பயணம் செய்யப்போகிறார். சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார். சிலருக்கு சச மகா யோகத்தையும் தரப்போகும் சனிபகவானால் யாருடைய தலையெழுத்து மாறும். கோடீஸ்வர யோகம் யாருக்கெல்லாம் தேடி வரும் என்று பார்க்கலாம்.
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாத சனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார். இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்பட போவது யார்?. அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்றும் பார்க்கலாம்.
மேஷம்
> மேஷ ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்கள் ராசியில் விழுவது கூடுதல் பலம். உங்களின் சொல்வாக்கு உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். நினைத்த பதவி தேடி வரும். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும்.

ரிஷபம்
சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமர்வதால் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். இந்த ராசிக்காரர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. புதிய கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

மிதுனம்
அஷ்டம சனியால் கஷ்டப்பட்டவர்களுக்கு இனி யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவி உயர்வு புரமோசன் கிடைக்கும். ஆலயங்களில் ஆன்மீக தரிசனம் இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவியும் யோகமும் தேடி வர வாய்ப்பு உள்ளது. நிறைய தான தர்மங்களை செய்யுங்கள். நன்மைகள் தேடி வரும்.

கடகம்
சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார். இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அஷ்டம சனியால் சிலர் கஷ்டங்களை அனுபவிக்கப்போகிறீர்கள். பயணங்களில் கவனம் தேவை. அகலக்கால் வைத்து ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எட்டாம் வீட்டு அதிபதி சனி ஏட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு தேடி வரும் பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளே உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்த சனி பகவான் எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. கூட மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு அகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

கன்னி
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வமும் அதிகரிக்கும். ஆறாம் வீட்டு அதிபதி ஆற்றில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். நோய்கள் நீங்கும், கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். மனநிலை தெளிவடையும். கோடிகளை கொட்டித்தரப்போகிறார் சனிபகவான். அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கவனமும் நிதானமும் தேவை.

துலாம்
அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்து நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கிறது. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே… அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வீடு, சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. அதே நேரத்தில் தாய் பத்திரத்தை பார்த்து வாங்குவது அவசியம். உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார். விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. திடீர் வருமானத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

தனசு
தனுசு ராசிக்காரர்களே..ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகப்போகிறது. எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்குள் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. நினைத்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும். இதுநாள் வரை பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் வரப்போகிறது. இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தரப்போகிறார். மன குழப்பம் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே ஏழரை சனியில் உங்களை பிடித்திருந்த ஜென்ம சனி விலகப்போகிறது. சனி பகவான் பாத சனியாக குடும்ப சனியாக உங்களுக்கு வரப்போகிறார். உங்களுக்கு எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும் சனிபகவான் உங்களை கை தூக்கி விடுவார். இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். உங்களின் புதிய பயணங்களால் இனி நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலம் தொடங்குகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் தனது ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 30 வயதுக்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார். ஏழரை சனி தொடங்கினாலும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. திடீர் பண வரவு வரப்போகிறது. அதே நேரத்தில் திடீர் செலவுகளும் வரும் சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

ஆங்கில சுருக்கம்
சனிப்பெயர்ச்சி 2023 மகரத்திலிருந்து கும்பத்திற்கு சனி பெயர்ச்சி. ஏழரை சனி ஏழரை வருட நீண்ட சனி காலம். மகரம், கும்பம், மீனம். அந்த நம்பிக்கைகளின்படி, விருச்சிகத்திற்கு அர்த்தாஷ்டம சனி, கடக ராசிக்கு அஷ்டம சனி என பல சவால்கள் உள்ள காலம் இது.