
செய்தி
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: சனி பெயர்ச்சி என்றாலே ஒருவித பதற்றம் எல்லோருக்கும் தெரியும். ஏழரை சனி, அஷ்டமத்து சனி கண்டகச் சனி என்றாலே கேட்கவே வேண்டாம் பயமும், மன அழுத்தமும் கூடவே வந்து விடும். சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனி பெயர்ச்சியால் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டுள்ள மகரம்,கும்பம்,மீன ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்குமா? இந்த கால கட்டத்தில் திருமணம் நடைபெறுமா என்று பார்க்கலாம்.
சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி முதல் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.
கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். பொதுவாகவே சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியாக பயணம் செய்யும் காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஏழரை சனியால் அல்லல்பட்டுக்கொண்டிருப்பீர்கள். பாத சனியாக தொடர்வதால் இரண்டரை ஆண்டு காலம் கொஞ்சம் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். குடும்ப சனிபகவான் இரண்டாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்து போகும். கால்களில் கவனம் தேவை. இந்த கால கட்டத்தில் யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம். கொடுத்த பணம் வராமல் போக வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடியால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். அந்த வேலை கிடைத்த பின்னரே இருக்கும் வேலையை விடுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை. திருமணம் தொடர்பாக பேச இது ஏற்ற காலம் அல்ல. 2024ஆம் ஆண்டு குரு பெயர்ச்சிக்குப் பிறகு குரு பகவானின் பார்வை கிடைக்கும் நேரத்தில் திருமணம் கைகூடி வரும். ஏழரை சனி காலத்தில் திருமணம் நடைபெறும் காலத்தில் அதிக கடன் வாங்கி அகலக்கால் வைக்காமல் செலவுகளை சுருக்கமாக வைத்திருப்பது நல்லது. சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வெண்ணெய் சாற்றினால் சனியால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

கும்பம்
சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வதால் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். பெரிய அளவில் முதலீடுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். அரசு போட்டி தேர்வுகளை எழுதியவர்கள் வெற்றி பெறுவீர்கள். திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. காரணம் ஏழாம் வீட்டிற்கு குரு பார்வை கிடைக்கிறது. நல்ல வரன் அமையும். திருமணத்திற்காக அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்தானது. கூட்டுத்தொழில் சிறப்படையும். ஜென்ம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறைய கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகே திருநாரையூர் பொங்கு சனீஸ்வரருக்கு குடும்பத்துடன் சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அபிஷேக அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஏழரை தொடங்குகிறது. சனி பகவான் 12ஆம் வீட்டில் அமர்வதால் பணம் விரயங்கள் மருத்துவ செலவில் ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாறுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கைகூடி வந்துள்ளது. யாருக்கும் பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கடனாக கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். திருமணம் சுப காரியம் செய்ய ஏற்ற காலம். வரன் பேசி முடிக்கலாம். சனிபகவான் தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள். கும்பகோணம் அருகில் திருக்கோடிகாவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

ஆங்கில சுருக்கம்
மகரம், கும்பம் மற்றும் மீனத்திற்கான சனிப்பெயர்ச்சி பலன் 2023 தமிழ் கணிப்புகள். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் மகரத்தில் இருந்து கும்பம் சென்றார். இந்த காலத்தில் திருமணம் நடக்குமா என்று பார்ப்போம்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: திங்கள், ஜனவரி 23, 2023, 13:25 [IST]