
கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் தளத்தில் ‘Quiet Mode’ என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இளம் வயது பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதியதொரு அம்சம் என சொல்லப்படுகிறது.
மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இப்போது இந்த கொயிட் மோடு (Quiet Mode) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அம்சம் இன்ஸ்டாவில் இயங்கும் அனைத்து வயதினருக்குமான அம்சமாக உள்ளது. இருந்தாலும் இளம் வயது பயனர்களை கருத்தில் கொண்டு இது அறிமுகமாகி உள்ளதாக தகவல். சதா சர்வ காலமும் இன்ஸ்டாவில் ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும் தலைமுறையினர் இந்த அம்சத்தின் மூலம் அதிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகிறது.
இதன் மூலம் இளம் வயது பயனர்கள் இரவு நேரங்களில் இன்ஸ்டாவில் நீண்ட நேரம் உலாவுவது தடுக்கப்படுமாம். இதன் மூலம் படிப்பில் இளம் வயது பயனர்கள் நாட்டம் செலுத்தலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும் இந்த அம்சத்தை பயனர்கள் தாங்களாக எனில் செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
இந்த அம்சம் எனேபிள் செய்யப்பட்ட நேரத்தில் பயனர்கள் பெறுகின்ற நோட்டிபிகேஷன் அனைத்தும் சைலண்ட் மோடில் இருக்கும் என தெரிகிறது. சமயங்களில் நீண்ட நேரம் பயன்படுத்தினால் அதுகுறித்த அலார்ட் கொடுக்குமாம். இந்த அம்சத்தை அணைத்த பிறகு பயனர்கள் தவறவிட்ட அனைத்தையும் பார்க்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பிற நாடுகளுக்கும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு இன்னும் சில டூல்களை இன்ஸ்டா அறிமுகம் செய்துள்ளது.