
செய்தி
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: சுப கிரகமான குரு பகவான் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறந்த சில நாட்களிலேயே இடப்பெயர்ச்சியாகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் குரு பகவான் சோபகிருது வருடம் சித்திரை 8ஆம் தேதி ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் ராகு அமர்ந்திருக்க குருவும் கூட்டணி சேருவதால் சில ராசிக்காரர்களுக்கு புதிய யோகம் கைகூடி வரப்போகிறது.
சோபகிருது தமிழ் புத்தாண்டு பலருக்கு நிறைய யோகங்களைத் தரப்போகிறது. குரு பெயர்ச்சி நிகழ்வால் குருவின் பார்வை பயணத்தால் மேஷம் முதல் கன்னி வரையில் பிறந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம் – ஜென்ம குரு
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பாக்ய ஸ்தான அதிபதி விரைய ஸ்தான அதிபதி. ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை விரைய ஸ்தானத்தில் அமர்ந்து விபரீத ராஜ யோகத்தை தரப்போகும் குரு ஏப்ரல் 21ஆம் தேதி முதல் ஜென்ம குருவாக ராகுவுடன் இணைகிறார். எங்கிருந்து பணம் வருகிறது என்று சொல்லமுடியாத அளவிற்கு பணமழை பொழியப்போகிறது. கணவன் மனைவிக்குள் இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இந்த ஆண்டு சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். வியாழக்கிழமை குரு ஓரையில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
ரிஷபம் – விரைய குரு
ரிஷப ராசிக்காரர்களே…லாப ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். நிறைய பண வரவு வந்தாலும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். பொறுப்பும் வேலை பளுவும் கூடும். சிலருக்கு பதவி உயர்வு கேட்ட இடத்திற்கு இடமாற்றமும் கிடைக்கும். வேலையில் கவனம் தேவை யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டினால் மட்டுமே நல்ல மதிப்பெண் கிடைக்கும். குரு பகவானின் பார்வை,4,6,8ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வீடு வாகனம் வாங்க யோகம் கைகூடி வரப்போகிறது. நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கும். வியாழக்கிழமை குருபகவானை வழிபட மறக்காதீர்கள்.
மிதுனம் – லாப குரு
மிதுன ராசிக்காரர்களே..தொழில் ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கோச்சார படி குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்தால் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசப்போகிறது. திருமணமாகாதவர்களுக்கு கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. குருவின் பார்வை உங்களுக்கு சுபமாக உள்ளது. உங்கள் ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது குரு பார்வை கிடைக்கிறது. குரு பலனால் குழந்தை பாக்கியம் கைகூடி வரப்போகிறது. குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும். வேலையில் இருப்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் நல்ல லாபமும் கிடைக்கும். குருபகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படையலிட்டு வழிபட நன்மைகள் பல மடங்காக அதிகரிக்கும்.
கடகம் – தொழில் குரு
கடக ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். பத்தில் குரு பதவியை பறிப்பார் என்று சொல்வார்கள். ஆனால் தசாபுத்தியை பொறுத்து உங்களுக்கு பதவி மாற்றம் வர வாய்ப்பு உள்ளது. செய்யும் தொழில் வியாபாரத்தில் இந்த வருடம் நிச்சயம் மாற்றம் ஏற்படும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். வேறு நல்ல வேலை கிடைக்கும் வரைக்கும் இருக்கிற வேலையை விட வேண்டாம். இல்லாவிட்டால் உள்ளும் போய் இப்போது உள்ள சூழ்நிலையில் வேலையில்லாமல் தவிக்க வேண்டியிருக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கி தர வேண்டாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். வியாழக்கிழமை மறக்காமல் நவகிரக குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
சிம்மம் – பாக்ய குரு
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய குருவாக பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பார்வையும் ஏப்ரல் மாதம் முதல் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. முக மலர்ச்சியோடு உற்சாகமாக செயல்படுவீர்கள். குரு பலன் வந்து விட்டதால் திருமணம் கைகூடி வரப்போகிறது. எந்த காரியம் என்றாலும் கவனமாக கையாள்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஊடலும் அடிக்கடி கூடும். வீடு இடமாற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். கவனமாக படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம். வியாழக்கிழமை அனுமனையும், விநாயகரையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.
கன்னி – அஷ்டம குரு
கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போகிறார். ஏப்ரல் மாதம் வரைக்கும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மறந்தும் கூட யாருக்கும் பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து போகாதீர்கள். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். நீங்கள் கடனாக கொடுக்கும் பணம் உங்களுக்கு திரும்ப வர வாய்ப்பில்லாமல் போய்விடும் கவனம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் விசயத்தில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள். வேலையில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காது தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. படிப்பில் அக்கறை செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். குரு அருள் கிடைக்கவும் குல தெய்வத்தின் அருள் கிடைக்கவும் பொங்கல் வைத்து வழிபட நன்மைகள் நடைபெறும்.
ஆங்கில சுருக்கம்
சொபகிருத்து தமிழ் புத்தாண்டு பலன் 2023: குரு பெயர்ச்சி இந்த 6 ராசிக்காரர்களுக்கு யோகம் தரும். குரு பெயர்ச்சி மீனம் ராசி முதல் மேஷம் ராசி வரை 2023 ஏப்ரல் 21 முதல் மீன ராசியில் ஆட்சி செய்யும் குரு பகவான் சித்திரை மாதம் ஏப்ரல் 21ம் தேதி மேஷ ராசிக்கு மாறுகிறார்.