
ஜோதிடம்
ஓய்-ஜெயலட்சுமி சி
மதுரை: நாட்டில் நல்ல மழை பொழியும், விவசாயம் செழிக்கும், அந்த நாடுகளுடனான பகை விலகி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும், நிம்மதியாகவும் வாழ்வார்கள் என சோபகிருத வருடத்திய தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைத்துறையினர் வணிகத்துறையினர் வளர்ச்சியடைவார்கள் எனவும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்திய வெண்பா

சோபகிருது தன்னிற் நொள்ளுவதெல்லாம் செழிக்கும்
கோபமகன்று குணம்பெருகும் – சோபனங்கள்
உண்டாகுமாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்
உண்டாகுமன்றே யுரை
இந்த வெண்பாவின் பொருளை பார்த்தால் சோபகிருது வருடத்தில் உலகில் உள்ள பழம்பெரும் ஊர்கள் எல்லாம் சிறப்பும், செழிப்பும் அடையும். எங்கும் சுபிட்சம் நிறைந்திருக்கும். மக்கள் மத்தியில் கோபம், பொறாமை போட்டி முதலிய தீய பண்புகள் நீங்கும். உலக மக்கள் அனைவரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்வார்கள். நற்குணங்கள் மேலோங்கும். சுபமான மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மழை பொய்க்காது பெய்யும் எல்லா நலன்களும் பெற்று மக்கள் வாழ்வர் எனவும் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்தில் பிறந்தவர்கள் சகல விதத்தில் மேன்மையுடனும் நற்காரியங்களை செய்பவர்களாகவும் இருப்பார்கள். காரியத்தில் வெற்றி பெறுபவர்களாகவும் அழகானவர்களாவும் அடக்கமானவர்களாவும் மங்களகரமான காரியங்களை செய்பவர்களாகவும் சாமர்த்தியசாலிகளாகவும் இருப்பார்கள் என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோபகிருது வருடத்தில் ராஜாவாக புதன் வருகிறார். மந்திரியாக சுக்கிரனும், சேனாதிபதியாக குருவும் வருகின்றனர். அர்க்காதிபதியாக சுக்கிரன், மேகாதிபதியாக குருவும் வருவது சிறப்பு. சஸ்யாதிபதியாக சந்திரன், ரசாதிபதியாக புதன்,நீரஸாதிபதியாக சந்திரன், தானியாதிபதியாக சனி, பசுநாயகராக பலதேவர் வருகின்றனர்.
சோபகிருது வருடத்தில் புதன் ராஜவாகவும் ரசாதிபதியாகவும் வருவதனால் மத்திய, மாநில அரசுகளினால் நாட்டில் கல்வி கலைகள் செழிக்கும். திரை கலைஞர்கள் ஏற்றம் காண்பார்கள். காமெடி நடிகர்கள் நன்கு வளர்ச்சியடைவார்கள். பச்சை நிற பயிர்கள் அபிவிருத்தி அடையும்.தேவையான அளவு மழை பொழியும். ஜோதிடத்துறை, புள்ளியியல் துறை,வணிகவியல் துறை நன்கு வளர்ச்சியடையும். இந்த ஆண்டு 4 புயல் சின்னங்கள் உண்டு. கடலோர மாவட்டங்கள் புயலினால் சேதமடையும். உப்பு உற்பத்தி அதிகரிக்கும். அதே நேரத்தில் மருத்துவ துறையில் முடக்கம் ஏற்படும். உயிர்காக்கும் மூலிகைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும்.
மந்திரியாகவும் அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதனால் நீர்வளம் பெருகும். ஏரி, குளங்கள், நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.பணப்பயிர்களும், நவதானியங்களும் நல்ல விளைச்சல் காணும். விவசாயம் செழிக்கும். நாட்டு மக்கள் சுகத்துடனும், சுபிட்சத்துடனும் வாழ்வார்கள். பட்டு சேலை, நகை, ஆடை ஆபரண தொழில் செய்பவர்கள் வளர்ச்சியடைவார்கள்.
சேனாதிபதியாகவும் மேகாதிபதியாகவும் குரு வருவதனால் நாட்டு எல்லையில் போர் பதற்றம் விலகும். ஆண்டை நாடுகளுடனான பகை விலகி நேசக்கரம் நீட்டுவார்கள். நாட்டில் சமரச சன்மார்க்க நெறி வளர்ச்சியடையும். நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்வார்கள். நாட்டில் நல்ல மழை பெய்து பயிர்கள் செழிக்கும்.
சஸ்யாதிபதியாகவும், நீரஸாதிபதியாகவும் சந்திரன் வருவதால் மக்கள் சுகபோகமாக வாழ்வார்கள். வெள்ளி விலை ஏறும். நெல் உற்பத்தி அதிகரிக்கும்.
தானியாதிபதியாக சனி வருவதனால் எள், உளுந்து போன்ற கருப்பு வகை தானியங்கள் வளர்ச்சியடையும். பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகள் நல்ல விளைச்சலை தரும். கரிசல் மண் பூமியில் விளையும் பயிர்கள் விருத்தியாகும்.
ஆங்கில சுருக்கம்
சொபகிருத்து தமிழ் புத்தாண்டு பலன் 2023: மங்களகரமான ஆண்டில் நாடு முழுவதும் நல்ல மழை பெய்யும் என்று தமிழ் பஞ்சாங்கம் கணித்துள்ளது. நல்ல விளைச்சல்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: வெள்ளி, ஜனவரி 20, 2023, 10:13 [IST]