
டெல்லி: லக்கிம்பூர் கேரியில் வாகனங்களை ஏற்றி 8 பேர் கொல்லப்பட்ட வழக்கில், ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் வாகனங்களை ஏற்றிக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் ஆஷிஷ் மிஸ்ராவின் ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் மேல்முறையீடு ஜாமீன் மனுவை விசாரித்தது. இந்நிலையில் இன்று ஆஷிஷ் மிஸ்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இதுதொடர்பான உத்தரவில், ‘ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய 8 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தங்கக் கூடாது.
வேறு எங்கு தங்கியிருந்தாலும், அவர் இருக்கும் இடம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். இவ்வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை கலைக்க முயன்றால், அவரது ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.