
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்த நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளித்தால் மட்டுமே இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் அல் அரேபியா என்ற தொலைக்காட்சிக்கு ஷெபாஸ் ஷெரீப் சமீபத்தில் நேர்காணல் அளித்துள்ளார். அதில், ''இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை அனுமதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும். இதுதான் நான் இந்திய தலைமைக்கு விடுக்கும் செய்தி. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்ற முடியும்.