
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை பெறப்பட்டது. மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனை தொடர்ந்து கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 1,105 இடங்கள் காலியாக உள்ளது.
இந்த இடங்களை உடனடி மாணவர் சேர்க்கையின் (ஸ்பாட் அட்மிஷன்) மூலம் வரும் 24ம் தேதி நிரப்ப பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உடனடி கலந்தாய்வில், பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று அதனை தவறவிட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் மற்றும் புதிதாக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் பங்கேற்கலாம்.
இந்த உடனடி மாணவர் சேர்க்கையில் இடம் கிடைக்க பெற்ற மாணவர்களிடம் மட்டும் கலந்தாய்வுக்கு கட்டணம் பெறப்படும். பொதுப்பிரிவினர் ரூ.3 ஆயிரம், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் ரூ.1,500 கட்டணம் செலுத்த வேண்டும். இதில், நகர்வு முறை கிடையாது. இணைப்பு கல்லூரிகளில் ஆண்டு கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கும். மாணவர்களின் தரவரிசையின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
இந்த உடனடி சேர்க்கைக்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும், மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு, கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள், காலியிடங்களுக்கான அட்டவணை ஆகியவை பல்கலைக்கழகத்தின் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் 0422-6611345 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.