
கோவை: இந்திய அளவில் பெண் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர் கல்வி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை வகித்து பேசியதாவது: இன்று பட்டம் பெறும் மாணவிகள் வாழ்வில் பல்வேறு பொறுப்புகளை ஏற்க உள்ளீர்கள்.
சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவிவெப்பமயமாதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். கோவை மாநகரம் தொழில் துறைக்கு உலகளவில் புகழ் பெற்றுள்ளது. தமிழ்மொழி மிகவும் பழமையான மொழி. இருள் சூழ்ந்திருந்த சமூகத்தின்மேல் விளக்கு ஒளி கொடுத்தவர் திருவள்ளுவர்.
ஜனநாயக நாடுகளின் தாயகம் இந்தியா. அதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது. பெண் கல்வி மற்றும் பெண்கள் அதிகாரமளித்தலில் இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது. அனைத்து தாய்மொழிகளுமே தேசிய மொழிகள்தான். ஒருமொழி மட்டும் மிகச்சிறந்தது என்று கூறமுடியாது.
தினந்தோறும் உலகளவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதமாகும். இவ்வாறு அவர் பேசினார். மொத்தம் 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பட்டம் பெற்றனர். அவினாசிலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் தியாகராஜன், கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், துணை வேந்தர் பாரதி ஹரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம்: தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநில அரசுகளுடன் ஒன்றிணைத்து விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நிதிநிலை அறிக்கை இதற்கென பிரத்யேகமாக நிதிஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக அரசின் கல்விக் கொள்கை தொடர்பான கேள்விகள், ஏற்கனவே மத்திய அரசின் பல்வேறு கல்வித் திட்டங்கள் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு இதுவரை இந்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளில் மட்டும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டு வந்த சூழலில் இந்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் புத்தகங்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மானியக் குழுவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் விரைவில் புதிய கல்விக் கொள்கையில் பல்கலைக்கழக மானியக்குழு மறு சீரமைப்பு செய்யப்படுகிறது, என்றார்.