
நாற்பதுகளில் சிவாஜி கணேசன் நாடகங்களில் நடித்து வந்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. டி.எஸ்.நடராஜனின் என் தங்கை நாடகம் அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. அதில் பாசமிகு அண்ணனாக சிவாஜி கணேசன் நடித்தார். கண் தெரியாத தங்கைக்காக தனது காதலை தியாகம் செய்யும் கதாபாத்திரம்.
இதே பாவலர் பாலசுந்தரத்தின் பராசக்தி நாடகமும் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டது.
இதுவும் அண்ணன், தங்கை கதைதான். இரண்டு நாடகங்களின் கதையும் அண்ணன், தங்கைப் பாசம் என்ற நேர்க்கோட்டில் பயணிப்பதால், இரண்டு கதைகளையும் ஒன்றாக்கி ஒரு திரைப்படம் தயாரித்தது என்று கோவையில் இயங்கி வந்த சென்ட்ரல் ஸ்டுடியோஸ் கருதியது. அதற்கு டி.எஸ்.நடராஜன் மறுப்பு தெரிவித்தார்.
தனது என் தங்கை நாடகம் மாறுதலின்றி திரைப்படமாக வேண்டும் என விரும்பினார். இதனால் சென்ட்ரல் ஸ்டுடியோஸின் முயற்சி பாதியிலேயே நின்றது. அந்த நேரத்தில் பராசக்தி நாடகத்தின் உரிமையை பி.ஏ.பெருமாள் வாங்கி, ஏவி மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து திரைப்படமாக்கும் வேலையில் இறங்கினார். என் தங்கை நாடகத்தில் நடித்து வந்த சிவாஜி அப்போது, அஞ்சலி தேவியின் பூங்கோதை படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அவரை சென்னை வரவழைத்து, மேக்கப் டெஸ்ட் எடுத்து, பராசக்தியில் பிரதான வேடத்தில் நடிக்க வைத்தனர்.
பராசக்தியை திரைப்படமாக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்க, என் தங்கை நாடகத்தின் உரிமையை அசோகா பிக்சர்ஸ் வாங்கி நாராயணமூர்த்தியை இயக்குனராக ஒப்பந்தம் செய்தார். என் தங்கை நாடகத்தில் சிவாஜி நடித்து வந்த பிரதான வேடத்தில் திருச்சி லோகநாதனை நடிக்க வைத்தனர். அவரது நடிப்பு திருப்தி தராததால் அவரை மாற்றி எம்ஜி ராமச்சந்திரனை நாயகனாக்கினர்.
பராசக்தி பல நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சிவாஜியின் ஒல்லியான தோற்றமும், வசன உச்சரிப்பும், சரியாக வருமா என்ற சந்தேகத்தை ஏவி மெய்யப்ப செட்டியாருக்கு ஏற்படுத்தியது. அவர் கே.ஆர்.ராமசாமியை சிவாஜிக்குப் பதில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், பெருமாள் சிவாஜி நடிப்பில் உறுதியாக இருந்தார். பல வருடங்கள் தயாரிப்பில் இருந்த பராசக்தி 1952 இல் வெளியீட்டிற்கு தயாராக இருந்தது. அந்த நேரத்தில் அஞ்சலி தேவியின் பூங்கோதையும் வெளியாகவிருந்தது. பெருமாள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பூங்கோதை வெளியீட்டை தள்ளி வைத்து, பராசக்தி சிவாஜியின் முதல் படமாக வெளியாக அஞ்சலி தேவி உதவினார்.
பராசக்திக்கு பல மாதங்களுக்கு முன்பு 1952 மே 31 ஆம் தேதி என் தங்கை எம்ஜிஆர் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அவரது நடிப்பில் 175 நாட்கள் கடந்த முதல் வெள்ளி விழாப் படமாக அது அமைந்தது. 1952 அக்டோபர் 17 தீபாவளியை முன்னிட்டு வெளியான பராசக்தி பெரும் சலசலப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது. சர்ச்சைகளை கடந்து திரையிட்ட 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் அனைத்திலும் 50 நாட்கள் ஓடிய படம், 175 தினங்களை கடந்து வெற்றி பெற்றது.
அண்ணன், தங்கை பாசம் என்ற ஒரே சரடில் அமைந்த கதைதான் என் தங்கையும், பராசக்தியும். இரண்டுமே வெள்ளி விழாப் படங்கள். இரண்டில் பராசக்தி இன்றும் பேசப்படுகிற படமாக உள்ளது. அதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல் வசனங்களும், முற்போக்குக் காட்சிகளுமே காரணமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.