
`நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுகவில் இணைந்து மீண்டும் எம்.பி.யாகிறாரா மு.க.அழகிரி?’ என்ற சந்தேகத்தையும் பரபரப்பையும் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உருவாக்கியது.
முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரியின் பிறந்தநாள் வரும் மாத இறுதியில் (ஜனவரி 30 ஆம் தேதி) வருகிறது. இதையொட்டி மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை நகர் பல்வேறு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அழகிரியின் ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும் என வலியுறுத்தி போஸ்டர்களை ஒட்டி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தான் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.அழகிரியை சந்தித்தார். பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி, மதுரை சத்திய சாய் நகரில் உள்ள மு.க. அழகிரி இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றார்.
இந்த சந்திப்பு திமுகவினரிடையும், அரசியல் களத்திலும் பரபரப்பாக பார்க்கப்படும் நிலையில், அழகிரியின் ஆதரவாளர்கள் `மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைய உள்ளார்’ என கூறி வருகின்றனர். இந்த நிலையில் தான் அழகிரியின் ஆதரவாளர்கள் அவரின் பிறந்தநாளையொட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் புதிதாக சில சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
அதில் மு.க.அழகிரி மற்றும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி ஆகியோரின் படங்களோடு `பழையன கழிதலும், புதிய புகுதலும்’, `கலைஞரின் பொன்னர் சங்கரே’, `கண்கள் பணிக்க வேண்டும், இதயம் இனிக்க வேண்டும், நாடாளுமன்றத்தை 40-ம் கைப்பற்ற வேண்டும்’ என்ற வாசகங்களோடு, நாடாளுமன்றத்தின் முன் பாதுகாவலர்களோடு மு.க.அழகிரி நடந்து வருவது போல் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவாளர்களின் இந்த போஸ்டர்கள் யாவும் `நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே மு.க.அழகிரி திமுகவில் இணைய உள்ளாரா, மு.க.அழகிரி மீண்டும் எம்.பி.யாக உள்ளாரா’ என பல்வேறு கேள்விகளும் பரபரப்பையும் எழுப்பியுள்ளது.
ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COM