
கண்ணதாசனும், வாலியும் கோலோச்சியிருந்த காலத்தில், 1968 இல் எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற நான் யார் எனத் தொடங்கும் பாடல், எம்ஜிஆரின் ததத்துவப் பாடல்களில் முக்கியமான ஒன்று இடம்பிடித்தது. பாடலை எழுதியது கண்ணதாசனா, வாலியா, ஆலங்குடி சோமுவா என்று அப்போது பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. தத்துவப் பாடல் என்பதால் கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என பலரும் நினைத்தனர்.
ஆனால், குடியிருந்த கோயிலில் கண்ணதாசன் பாடல்கள் எழுதவில்லை. வாலி நான்கு பாடல்கள் எழுதினார். ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலை ஆலங்குடி சோமு எழுதினார். குங்குமப் பொட்டின் மங்களம் பாடலை முஸ்லீம் பெண்ணான ரோஷனரா பேகம் எழுதினார். அவர் எழுதிய ஒரே திரையிசைப் பாடல் இது.
நான் யார்… பாடலை அறிமுக பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் எழுதியது பிறகுதான் பலருக்கும் தெரிய வந்தது. புலமைப்பித்தனின் இயற்பெயர் ராமசாமி. கோவை மாவட்டம் பள்ளப்பாளையம் சொந்த ஊர். தந்தை கருப்பண்ணத்தேவர், தாய் தெய்வானையம்மாள். வாத்தியார் ஒருமுறை இவரை பைத்தியக்காரன் எனத் திட்ட, ஆமாம், நான் தமிழ்ப் புலமையில் பித்துக் கொண்டவன் என தனது பெயரைப் புலமைப்பித்தன் என வைத்துக் கொண்டார். கோவை சூலூரில் நூற்பாலையில் வேலை செய்து கொண்டே தமிழ்ப் புலவர் படிப்பை முடித்தார் தமிழாசிரியராக இருந்து இவருக்கு இயக்குனர் கே.சங்கர் குடியிருந்த கோயில் படத்தில் முதல் வாய்ப்பை வழங்கினார்.
பாடலுக்கான சூழலை இயக்குனர் தெரிவித்த பின், சாலையோரத்தில் நின்றபடியே நான் யார் பாடலை எழுதியுள்ளார் புலமைப்பித்தன். யார் என்ற விகுதியில் முடியும்படி அவர் எழுதிய தத்துவப் பாடல் வெளியான போது ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. முதல் பாடலிலேயே தானொரு புலவர் என்பதை அவர் நிரூபித்தார்.
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியுமா
தந்தை என்பார் அவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியுமா
தந்தை என்பார் அவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார் ஹாஹ…
உறவார் பகையார் உண்மையை உணரார் உனக்கே நீ யாரோ ?வருவார் இருப்பார் போவார் நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
நான் யார் நான் யார் நீ யார்
உள்ளார் புசிப்பார் இல்லார் பசிப்பார் உதவிக்கு யார் யாரோ ?
நல்லார் தீயார் உயர்ந்தார் தாழ்ந்தார் நமக்குள் யார் யாரோ ?
அடிப்பார் வலியார் துடிப்பார் மெலியார் தடுப்பார் யார் யாரோ ?
எடுப்பார் சிரிப்பார் இழப்பார் அழுவார் எதிர்ப்பார் யார் யாரோ ?எதிர்ப்பார் யார் யாரோ ?
பினியார் வருவார் மருந்தார் தருவார் பிழைப்பார் யார் யாரோ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார் துணை யார் வருவாரோ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார் நாளை யார் யாரோ?
பிறந்தார் இறந்தார் நடந்தார் கிடந்தார் முடிந்தார் யார் ?முடிந்தார் யார் யாரோ ?
நான் யார் நான் யார் நீ யார்?
எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்ற புலமைப்பித்தன் ஊருக்கு உழைப்பவன், அடிமைப்பெண், மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன், இதயக்கனி, பல்லாண்டு வாழ்க, குமரிக்கோட்டம், நினைத்ததை முடிப்பவன், நேற்று நாளை, மீனவ நண்பன், உலகம் சுற்றும் வாலிபன் என தொடர்ச்சியாக அவரது படங்களில் பாடல்கள் எழுதப்பட்டன. அடிமைப்பெண் படத்தில் இவர் எழுதிய ஆயிரம் நிலவே வா…, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் தென்றலில் இடம்பெற்ற ஆடும் கூந்தலில்…, இதயக்கனியில் இடம்பெற்ற, நீங்க நல்லா இருக்கணும்.., நினைத்ததை முடிப்பவனில் இடம்பெற்ற, பூமழை தூவி…, நல்ல நேரத்தில் இடம்பெற்ற, ஓடி ஓடி உழைக்கணும்.. ., நேற்று இன்று நாளை இடம்பெற்ற, நீ என்னென்ன சொன்னாலும் கவிதை…, பாடும் போது நான் தென்றல் காற்று…, என்ற இவரது பாடல் பங்களிப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
கன்னிப் பருவத்திலே படத்தில் இடம்பெற்ற, பட்டுவண்ண ரேசாவாம்.., ரோசப்பூ ரவிக்கைக்காரியில் இடம்பெற்ற, உச்சி வகுந்தெடுத்து, நாயகனில் வரும், தென்பாண்டிச் சீமையிலே… போன்ற புகழ்பெற்ற பாடல்களும் இவர் இயற்றியவையே. இது போல் நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதி அழியாப் புகழ்பெற்றார். எம்ஜிஆர் ஆட்சியில் அரசவை கவிஞராகவும், சட்ட மேலவையின் துணைத்தலைவராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பதவி வகித்தார். 2021 இல் உடல்நலக்குறைவால் காலமானார்.
உடுமலை நாராயணக்கவி, மருகதாசி, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி, வைரமுத்து என்ற ஸ்டார் பாடலாசிரியர்கள் வரிசையில் அமிழ்தும் தமிழுமாக பல அற்புதமான பாடல்களைத் தந்த கவிஞர்கள் குடத்திலிட்ட விளக்கமாக ஆக்கிப் போனார்கள். அவர்களில் முக்கியமானவர் புலமைப்பித்தன். அவரது பாடல்களை அவரது பெயருடன் நினைவு கூர்வதற்காக அடிக்கடி அவரது பாடல்கள் குறித்து பேச வேண்டிய தேவை உள்ளது.
இதையும் படியுங்கள்… 1980 முதல் 2007 வரை… ஏவிஎம் நிறுவனமும், ரஜினியும் இணைந்து செய்த சாதனைகள்!
@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: