
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் கார், பஸ், ரயில்கள் மூலம் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வருகின்ற பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக தணிகை இல்லம், கார்த்திகேயன் இல்லம், சரவண பொய்கை விடுதிகள் உள்ளது. மலைக்கோயில் அடிவாரம் சரவண பொய்கை, மலைக்கோயில் பகுதிகளில் முடிகாணிக்கை செலுத்துவதற்காக காணிக்கை மண்டபங்கள் உள்ளன.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, இந்து சமயஅறநிலையத்துறை சார்பில், கோயில்களில் உள்ள நிறை, குறைகள் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கட்டணமில்லா எண் 1800 425 1757 நம்பரில் பக்தர்கள் புகார்கள் தெரிவிக்க முடியும். இந்த நம்பர் பக்தர்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும். தற்போது கோயிலில் உள்ள நிறை, குறைகளை தெரிவிக்க முடியும்.
தற்போது இந்த இலவச அழைப்பு எண் குறித்து விளம்பர பதாகைகள் மலைக்கோயில் கோயில், குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் பகுதிகள், மொட்டையடிக்கும் பகுதிகள் மற்றும் திருத்தணி முருகன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளம்பர பலகைககள், தமிழ், ஆங்கிலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தணி முருகன் கோயில் உள்பட உப கோயில்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் அந்தந்த மாநில மொழிகளிலும் புகார்கள் தெரிவிக்கும் நம்பரை எழுதிவைக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.