
மும்பை: “டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாதது எப்போதுமே இந்திய கிரிக்கெட் அணியின் பிரச்சினையாக உள்ளது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை நெருங்கி வந்து ஆட்டத்தை இழந்தது நியூஸிலாந்து. அந்த அணி 337 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
“எனக்கு தெரிந்து இதுதான் இந்தியாவின் ஆல்டைம் சிக்கலாக உள்ளது என நினைக்கிறேன். அது டார்கெட்டை டிஃபண்ட் செய்ய முடியாமல் தடுமாறுவது. இந்திய அணி எப்போதும் சேஸிங்கில் சிறப்பாக செயல்படும். இந்திய அணி 350 ரன்கள் இலக்கை விரட்ட வேண்டிய சூழல் இருந்தால் நிச்சயம் அதை வெற்றிகரமாக செய்திருக்கும். ஏனெனில் அந்த அளவுக்கு அணியின் பேட்டிங்கில் டெப்ட் உள்ளது.
இதனை இதற்கு முன்னர் டி20 கிரிக்கெட்டிலும் நாம் பாரத்துள்ளோம். 190 அல்லது 200 ரன்களை எடுக்கும் வல்லமை கொண்ட அணியால் அதுவே அதை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் வந்தால் அதை செய்ய முடியாமல் திணறும். அதனால் இந்திய அணியின் பவுலிங் கொஞ்சம் கவலைக்குரியதாக இருப்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.