
கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவர் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து நடிகை அபர்ணா பாலமுரளி தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியின் விழாவில், தனது ‘தங்கம்’ பட புரமோஷனுக்காக சென்ற நடிகை அபர்ணா பாலமுரளியிடம் மாணவர் ஒருவர் நடந்துகொண்ட விதம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அபர்ணா பாலமுரளி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளைத் தொடுவது சரியல்ல என்ற புரிதல் கூட சட்டக்கல்லூரி மாணவருக்கு இல்லாதது வேதனையைத் தருகிறது. எனது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பியதும் சரியான முறையல்ல. அதன்பிறகு அந்த மாணவர், எனது தோளில் கைகளை வைக்க முயன்றார். இவ்வாறு ஒரு பெண்ணிடம் நடந்துகொள்ளும் முறை சரியானது கிடையாது.
இந்த விவகாரத்தின் பின்னால் செல்ல எனக்கு நேரமில்லை என்பதால் நான் புகார் அளிக்கவில்லை. எனது அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியதன் மூலம் நடத்தைக்கு நான் பதிலளித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள், நிகழ்ச்சி முடிந்தபின் மன்னிப்புக் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மஞ்சிமாக மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோவைப் பகிர்ந்துகொள்வது நம்பமுடியாததாகவும், அருவருக்கத்தக்க செயலாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பாடகி சின்மயும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நம்பமுடியாத மற்றும் அருவருப்பானது! https://t.co/Ls4y06QrVx
— மஞ்சிமா மோகன் (@mohan_manjima) ஜனவரி 19, 2023
ஆதாரம்: WWW.PUTHIYATHALAIMURAI.COM