
சென்னை: பொதுத் துறையைச் சேர்ந்த யூகோ வங்கியின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 110.37 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2022-23-ம் தேதி நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ரூ.652.97 கோடி நிகர லாபம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய 2021-22-ம் நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.310.39 கோடியுடன் ஒப்பிடுகையில் 110.37 சதவீதம் அதிகமாகும்.
டிசம்பருடன் முடிவடைந்த 9மாத காலத்தில் வங்கியின் நிகர லாபம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1,281 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகர வட்டி வருவாய் ரூ.1,762.61 கோடியிலிருந்து 10.74 சதவீதம் உயர்ந்து ரூ.1,951.87 கோடியானது. இடைவருமானம் ரூ.719.15 கோடியிலிருந்து ரூ.823.46 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2022 டிசம்பர் 31 நிலவரப்படி வங்கியின் சர்வதேச வர்த்தகம் ரூ.3,94,228.98 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. இவ்வாறு யூகோவங்கி செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.