
டெல்லி: சர்வதேச போட்டிகளில் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், சரிதா மோரே, சத்யவர்த் மாலிக், ஜிதேந்தர் சின்கா என சுமார் 30க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி, ஜந்தர் மந்திரியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதுடன், வீரர், வீராங்கனைகளை மன உளைச்சல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக குற்றம் சாட்டிய அவர்கள், இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது நட்சத்திர வீராங்கனை வினேஷ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ‘கடந்த காலங்களில் பல வீராங்கனைகள் பாலியல் புகார்களை கூறியபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கூட்டமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருந்தாலும், அதிக எண்ணிக்கையிலான மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லிக்கு அருகில் உள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும் டெல்லியிலோ, சண்டிகரிலோ பயிற்சி முகாம்களை வைக்க மாட்டார்.
அவரது வீட்டில் இருக்கும் உத்ரபிரதேசம் லக்னோவில் சர்வதேச போட்டிகளுக்கு முன்னோட்ட பயிற்சி முகாம்களை நடத்துவார். இப்போது காமன்வெல்த் போட்டிக்கான முகாம் அங்குதான் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஏனெனில், அங்கு தனது பாலியல் சேட்டைகளுக்கு வசதியாக இருப்பதால்தான். கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் கேட்டால், ஆட்டக்காரர்களின் எதிர்காலத்தையே அழித்து விடுகின்றனர். தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
வீராங்கனைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து பிரதமருக்கும், ஒன்றிய விளையாட்டு துறை அமைச்சருக்கும் மனு அனுப்பி உள்ளோம்.கூட்டமைப்பு தலைவரின் செயலை பார்த்து வெட்கப்படுகிறேன்’ என்று வினேஷ் போகத்தின் உறவினரும் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில், பிரிஜ் பூஷன் தனது பதவியை ராஜினா செய்வதுடன், சிறையில் அடைக்கப்படும் வரை ஓயப்போவதில்லை என்று வினேஷ் உறுதியுடன் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் மறுத்துள்ளார்.