
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான மூன்று போர்களால், பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ‘அல் அரேபியா’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியாவுடன் நடத்திய மூன்று போர்களுக்கு பின்னர், பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது; ஆனால் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை புறக்கணிக்க முடியாது.
எங்களிடம் திறமையான பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். இந்த சொத்துக்களை வளப்படுத்தவும், பிராந்தியத்தில் அமைதியையும் கொண்டு வரவேண்டும். ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளங்களையும் வீணாக்குவதை காட்டிலும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியதால், பாகிஸ்தானில் துயரமும், வறுமையும், வேலையின்மையும் அதிகரித்தன.
அதன் மூலம் நாங்கள் பாடத்தைக் கற்றுக்கொண்டோம்; நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம். வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக எங்களது வளங்களை வீணடிக்க விரும்பவில்லை’ என்றார்.