
சென்னை: நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.147.50 பிடித்தம் செய்துள்ளது. இது குறித்த தகவல் பயனர்கள் சிலர் பெற்றிருக்கலாம். இது டெபிட் / ஏடிஎம்டின் ஆண்டு பயன்பாட்டு சந்தாவுக்கான சேவை கட்டணமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டெபிட் கார்டு பராமரிப்புக்காக 125 ரூபாயை வசூலித்து வருகிறது பாரத ஸ்டேட் வங்கி. இதோடு சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படுகிறது. எனவே ரூ.147.50 பயனர்களின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே டெபிட் கார்டு மாற்றி கொடுக்க 300 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியை சேர்த்து இந்த வங்கி வசூல் செய்கிறது.
மேலும், கடந்த 2022 நவம்பர் வாக்கில் பல்வேறு கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தையும் மாற்றி இருந்தது இந்த வங்கி. தற்போது நாட்டில் 22,309 வங்கிக் கிளைகள் மற்றும் 65,796 ஏடிஎம் மையங்கள் என மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது எஸ்பிஐ. இதன் டெபாசிட் பேஸ் மிகவும் அதிகம்.
டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு சந்தா பிஎன்பி வங்கியில் அதிகபட்சமாக ரூ.500 வரை உள்ளது. அதுவே ஹெச்டிஎப்சி வங்கியில் ரூ.200 முதல் ரூ.750 வரை உள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் ரூ.99 முதல் ரூ.1,499 வரை இந்த சேவைக் கட்டணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.