
டமஸ்கஸ்: ஒயிட் ஹெல்மேட்ஸ்… சிரியாவில் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் நேரங்களில், வெள்ள நிற தலைக்கவசத்துடன் வரும் இந்த வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றியவர்கள்.
தற்போது, சிரியாவில் ஏற்படுள்ள பூகம்பத்திலும் சரிந்த கட்டிடங்களில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்ற இரவு பகலாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கிய 2014-ஆம் ஆண்டு முதலே மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது ஒயிட் ஹெல்மெட்ஸ் தன்னார்வ அமைப்பு. ஜேம்ஸ் லி மெசுரியர் நிறுவிய இந்த அமைப்பில் சுமார் 3000-க்கும் அதிகமான தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களில் பெண் தன்னார்வலர்களும் அடக்கம்.
பொறியாளர்கள், ஓவியர்கள், வங்கி அதிகாரிகள், மாணவர்கள் இவர்களே ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பில் தன்னார்வலர்களாக உள்ளனர். தங்களது சேவையால் லட்சக்கணக்கான உயிர்களை ஒயிட் ஹெல்மெட்ஸ் அமைப்பு இதுவரை காப்பாற்றியுள்ளது.
அதேச் சேவை பணியைதான் தற்போது ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பு சிரியாவின் அஃப்ரின் நகரில் செய்து கொண்டிருக்கிறது. தங்களது மீட்புப் பணிக்கு மத்தியில் சர்வதேச அமைப்புகள் சிரியாவுக்கு உதவ வேண்டும் கோரிக்கையை அந்த அமைப்பு, உலக நாடுகளுக்கு முன்வைத்துள்ளது.
இதுகுறித்து ஒயிட் ஹெல்மேட்ஸ் அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “பூகம்பத்தால் கட்டிங்கள் சரிந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சர்வதேச அமைப்புகள் எங்களுக்கு உதவ வேண்டும். சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால், இரு நாடுகளிலும் இதுவரை 5,775 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்தது வருகிறது.