
பாஜக முடிவு என்ன?
இந்நிலையில் பாஜக தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் பாஜக தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நல்லதொரு வாய்ப்பு. குறிப்பாக அண்ணாமலை தலைமையின் கீழ் தமிழ்நாடு பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கை சரியாக எடை போட்டு விட முடியும்.
அதிமுகவிற்கு ஆதரவு
அதுமட்டுமின்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருதரப்பும் மாறி மாறி ஆதரவு கேட்டுள்ளனர். தனது தரப்பில் வேட்பாளரை நிறுத்தாவிட்டால் நிச்சயம் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தாக வேண்டும். அப்போது ஈபிஎஸ் தரப்பிற்கு ஆதரவா? இல்லை ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவா? என கேள்வி எழக்கூடும். எந்த ஒரு தரப்பிற்கு ஆதரவு அளித்தாலும் அது உண்மையான அதிமுக அவர்கள் தான் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் அமைந்துவிடும்.
பிரியும் வாக்குகள்
மற்றொரு தரப்பும் கடுப்பாகும். இப்படிப்பட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க பாஜக தனித்து போட்டியிடுவது சிறந்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அது வாக்குகளை பிரிக்க உதவுமே தவிர வெற்றி வாய்ப்பிற்கு உதவாது என்ற பேச்சும் உண்டு. மேலும் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருவரும் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தினால் இரட்டை இலை முடக்கப்படும். அப்போது தனி சின்னம் ஒதுக்கப்பட்டு சுயேட்சை போல அதிமுக வேட்பாளர்கள் மாறி விடுவர்.
தனித்து போட்டி
பாஜகவை பொறுத்தவரை எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு இதுவரை ஆதரவு அளித்தது கிடையாது. எனவே தாமே ஒரு வேட்பாளரை நிறுத்திவிட்டால் இந்த சிக்கலில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி பாஜக வேட்பாளரை நிறுத்தினால் அதற்கு தனது முழு ஆதரவை தருவதாக ஓபிஎஸ் பேசியுள்ளார். இது சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.
கூட்டணி சிக்கல்
பாஜக தனித்து களமிறங்கினால் அது காங்கிரஸ் வேட்பாளருக்கு நெருக்கடியை அளிக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில் வாக்குகள் பிரியும் என்பது பொதுவான கணக்கு. இவ்வாறு தனியாக நிற்பது எடப்பாடி பழனிசாமியை கடுப்பில் ஆழ்த்தாதா? அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கணக்குகள் சிக்கலில் கொண்டு போய் விடாதா? போன்ற கேள்விகள் எழலாம். அதற்கு வாய்ப்பில்லை என்பது பாஜகவின் எண்ணம்.
யோசித்து அறிவிப்போம்
ஏனெனில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து தான் களமிறங்கியது. அதன்பிறகு நட்புறவு தொடர்வதை பார்க்க முடிகிறதே எனச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் அண்ணாமலை இன்று அளித்துள்ள பேட்டியில், இன்னும் யோசித்து அறிவிப்போம். இன்னும் காலம் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே பாஜக தலைமையின் முடிவு, அதனால் ஏற்படும் தாக்கத்தை பொறுத்திருந்து பார்க்கலாம்.