
மும்பை: முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய மகளிர் கிரிக்கெட்டில் மிகமுக்கிய தருணமாக அமைந்துள்ளது. அகமதாபாத் அணியை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது அதானி குழுமம்.
மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை பற்றி முதல் சீசன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், கேப்ரி குலோபல் மற்றும் அதானி குழுமம் வாங்கியுள்ளது. அகமதாபாத் அணியை அதானி குழுமம் ரூ.1,289 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது.
இதற்காக ஏலத்தில் மொத்தம் 17 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. இதில் 7 ஐபிஎல் கிரிக்கெட் அணிகளும் அடங்கும். 16 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் சீசனுக்கான போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏலம் பிப்ரவரி முதல் வாரம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மகளிர் பிரீமியர் லீக் ஒளிபரப்பு உரிமத்தை வைகோம் 18 கைப்பற்றியுள்ளது. 2023 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளுக்கான மொத்த தொகை ரூ.951 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.