
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பெண் அமைச்சர் ஒருவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவர் விரட்டியடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருவதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மம்தா பூபேஷ் என்பவரின் வீட்டில் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவர் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைராகி வருகிறது.
இந்த வீடியோவை ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘பெண்கள் தங்களது குரலை எழுப்பும் போது, அவர்களால் (அமைச்சர்) வெளியேற்றப்படுவார்கள். இந்த ஆட்சியில், ஏழைப் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.
காங்கிரஸ் அமைச்சரின் வீட்டில் இருந்து பெண்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் வீடியோவை பார்க்கும் போது, மற்ற பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக, அமைச்சர் மம்தா பூபேஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.