
குருகிராமம்: 10 நிமிடத்தில் பயனர்கள் ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்யும் ஜொமாட்டோவின் இன்ஸ்டான்ட் டெலிவரி சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் ஜொமாட்டோவில் 800 பணியிடங்கள் குறித்த அறிவிப்பை அதன் தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் வெளியிட்டுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வசிக்கும் சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் வரும் போனில் ஜொமாட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவன செயலிகள் நிச்சயம் இருக்கும். அந்த வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும்.
இந்த சூழலில் ஜெனரலிஸ்ட், வளர்ச்சி மேலாளர், மென்பொருள் டெவலப்மெண்ட் பொறியாளர் உட்பட 5 பிரிவுகளில் உள்ள பணி வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை லிங்க்ட்இன் தளத்தில் தீபீந்தர் கோயல் வெளியிட்டுள்ளார். அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்தவர்கள் விலகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
10 நிமிட டெலிவரி நிறுத்தமா? – இன்ஸ்டான்ட் டெலிவரி சேவையை நாங்கள் கைவிடவில்லை. அதில் புதிய மெனுவை சேர்க்கும் பணி நடக்கிறது. அதற்காக வேண்டி எங்களது பார்ட்னர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என ஜொமாட்டோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.